Sunday, September 21, 2008

தமிழ் நிகழ்ச்சிகள் - விவிதபாரதி

நான் விவிதபாரதியின் ரொம்ப வருட ரசிகை! ஹிந்தி, தமிழ் நிகழ்ச்சிகள், விளம்பரத் தடங்கல், பேச்சுத் தடங்கல் அதிகம் இல்லாமல் இருப்பதால் கொஞ்சம் அமைதியாக ரேடியோ கேட்க்கலாம்! அதுவும் காலையில் சமையல் செய்து கொண்டே ட்ரான்ஸ்ஸிஸ்தரில் பாட்டு கேட்க ரொம்ப பிடிக்கும்!

பக்திப் பாடல்களில் பழைய TMS, SPB, சுஷீலா, ஜானகி, இளையராஜா பாட்டுக்கள் கேட்க இனிமையாக இருக்கும். அப்புறம் எட்டு மணிக்கு மருத்துவர்கள் ஐந்து நிமிடம் வெவ்வேறு வியாதிகள் குறித்து ஆலோசனைகள் சொல்வார்கள். ரொம்ப நல்ல நிகழ்ச்சி இது. தைராயிட் (thyroid) இத்தனை கடுமையான வியாதி என்று எனக்கு இதுவரை தெரியாது. ஆஸ்துமா சின்ன வயதில் வந்தவர்கள் தைரியமாக இந்ஹலெர் (inhaler) தொடர்ந்து உபயோகிக்கலாம் என்பது இந்த நிகழ்ச்சியின் மூலம் தெரிந்தது. தாய்ப்பால் எத்தனை நாள் கொடுக்கணும், எப்படி கொடுக்கணும் போன்ற உபயோகமான தகவல்களும் கிடைத்தது.

அப்புறம் 'சுக ராகங்கள்/ ரஞ்சனி ஸ்ரீரஞ்சனி' நிகழ்ச்சி. திருப்பி திருப்பி கேட்டாலும் போரடிக்காத நிகழ்ச்சி! ராகங்களைப் பற்றிய தகவல்கள், கூட வரும் சினிமா பாடல்கள், கோபி-குமார் நகைச்சுவை நிறைந்த பேச்சு - எல்லாமே இனிமை!

அடுத்து வருவது 'உங்கள் விருப்பம்' நிகழ்ச்சி. சில முறை நல்ல பாடல்களில் ஆரம்பிக்கும். அதைத் தொகுப்பவர் நல்ல தமிழ் பேசினால் கேட்பேன். இன்று காலை மாதிரி 'கல் கல்' தமிழ் என்றால் ஆப் (off) செய்து விடுவேன். ஒரு பெண் குரல், 'உங்கல் விருப்பம் நிகழ்ச்சியில், உங்கலுக்கு பிடித்தமான பாடல்கலைக் கேட்கலாம்' என்று சொல்கிறது. ரேடியோவில் எப்படி இந்த மாதிரி பேசுபவர்களை தேர்ந்தெடுக்கிறார்கள்? கமல் ஹாசன் 'தெனாலி' படத்தில் டி.வி. தமிழ் என்று சொல்வார். இப்பொழுது ரேடியோ தமிழ் கூட இதுதான் போலிருக்கிறது.

சில வருடங்களுக்கு முன்பு வரை இந்த மாதிரி பேசுபவர்கள் ரொம்ப கீழ் மட்டத்தினர், படிக்காதவர்கள் என்று சொல்வார்கள். இப்பொழுது ரேடியோவில் வரும் நிகழ்ச்சியில், மருத்துவர்கள் கூட பெரும்பாலும் இந்த தமிழ் பேசுகிறார்கள். நம்பவே முடியவில்லை. என் தங்கை ஒரு புகழ் பெற்ற பள்ளிக்கூடத்தில் (பல்லிக்கூடத்தில்!) ஆசிரியை. அங்கு இருக்கும் தமிழ் ஆசிரியை கூட இந்தத் தமிழ் தான் பேசுகிறார், என்கிறாள் அவள்! ஏற்கனவே தமிழ்க் காரர்கள் ஆங்கிலம் நிறைய கலந்து பேசுபவர்கள். ஹிந்தி நிகழ்ச்சிகளில் அழகாக நல்ல ஹிந்தி, ஆங்கிலம் கலக்காமல், பேசுகிறார்கள். கேட்கவே இனிமையாக இருக்கிறது. தமிழ் மொழியை தமிழ்க்காரர்களே கொல்கிறார்கள். நினைத்தாலே என்னவோ செய்கிறது.

நம் முதல் அமைச்சர் தமிழ் புலவர். அவர் நினைத்தால், முதலில் அவருடைய அமைச்சர்கள் நல்ல தமிழ் தான் பேச வேண்டும் என்று கட்டளை போடலாம். வாரத்தில் மூன்று நாள் ஒரு மணி நேரம் ஆசிரியர் வைத்து, நல்ல தமிழ் சொல்லி கொடுக்கலாம். நல்ல தமிழ் பிழைக்க ஏதாவது உடனே செய்தாக வேண்டும்.

ஜெயலலிதா சொன்னால் கண்டிப்பாக பயத்திலாவது அவர் கட்சியினரை நல்ல தமிழ் பேச வைக்க முடியும்! விஜயகாந்த் வந்தால், கொஞ்ச நஞ்சம் உயிர் இருக்கும் நல்ல தமிழும் செத்து விடும்!

யாராவது தமிழைக் காப்பாற்றுங்கள்!